Saturday, April 16, 2011

"ஓ" போடலாம் வாங்க !

பிரமிக்க வைக்கும் அளவிற்கு இப்படி 78 % தமிழக மக்கள் மானாவாரியாக வந்து வோட்டளித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்கள் ! இந்த அளவுக்கு வோட்டுக்கள் பதிவானதர்க்கான காரணம், ஆளும் கட்சியின் சாதனையா ? அவர்கள் பட்டுவாடா செய்த பணத்தின் மகிமையா ? அல்லது, ஆளும் கட்சியின் மேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கயின்மயா ? அல்லது அதிமுகவின் மேல் படர்ந்துள்ள திடீர் நம்பிக்கை வெள்ளமா ? இவை எதுவுமே இல்லை. தமிழகத்தில், வரலாறு காணாத வாக்கு பதிவு நடந்ததற்கு காரணம், தேர்தல் கமிஷனும், பிரவீன் குமாரும், கேட்பாரில்லாமல் தான்தோன்றி தனமாக ஆட்டம் போட்டுகொண்டிருந்த அரசியல்வாதிகளை கலங்கடிக்க செய்த அவர்களது திக் திக் நடவடிக்கைள் மட்டுமே என்பது தான் உண்மை !!! எப்படி என்கிறீர்களா ?

கருணாநிதியின் ஊழல் படிந்த கழக /குடும்ப ஆட்சியையும் பற்றியும், ஸ்பெக்ட்ரம் ஊழில் அடித்த மகா மெகா தொகையையும் பற்றியும், பல துறைகளில் இந்த குடும்ப ஊடுருவலை பற்றியும், தங்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளாத குறையாக ஒரு சாரார் புலம்பி கொண்டு இருப்பது உண்மை தான். தமிழகத்தில் என்றைக்குமே இல்லாத அளவிற்கு கருணாநிதியின் கழக / குடும்ப ஆட்சியின் மேல் ஒரு வெறுப்பும், நம்பிக்கை இல்லாத தன்மையும் இந்த சாராருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் உண்மைதான். யார் இந்த ஒரு சாரார்? என்றைக்குமே வோட்டுசாவடி படி ஏறாத, அல்லது அத்தி பூத்தார்ப்போல் வோட்டு போடும், படித்த தமிழர்கள், நகர்புற வாசிகள், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள், அரசியல் நாட்டம் அதிகம் இல்லாத இளம் மற்றும் புதிய வாக்காளர்கள் தான்.

தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள் இல்லாமல் போயிருந்தால், ஆளும் கட்சி போட்டுவைத்திருந்த திட்டங்கள் அனைத்தையும் ஆணையம் தவிடு போடி ஆக்காமல் இருந்திருந்தால், கலைஞரும், சிதம்பரமுமே புலம்பும் அளவிற்கு அக்கிரமங்களை தடுக்காமல் இருந்திருந்தால், இன்றைய தமிழகத்தின் முதுகெலும்பாக இல்லாமல் போய்விடினும், இன்றைய தமிழகத்தின் தண்டுவடமாக செயல் பட்டு வரும் இந்த ஒரு சாராருக்கு நிச்சயமாக ஜனநாயகத்தின் மீது புதிய நம்பிக்கை ஏற்ப்பட்டு இருக்காது ! ஜனநாயக நம்பிக்கை மீது தேர்தல் ஆணையம் புது ரத்தம் பாய்ச்சாமல் இருந்திருந்தால் இந்த ஒரு சாரார், " நாம என்ன வோட்டு போட்டு என்ன நடந்துட போகுது ? தேவையான கள்ள வோட்ட இவனுகளே போட்டுக்குவானுங்க, என் வோட்டையே நான் போடறதுக்குள்ள இவனுகளே போட்டாலும் போட்டிருப்பனுங்க, அப்புடியே நான் போட்டாலும், ஏதாவது தில்லு-முள்ளு அடி-தடின்னு செஞ்சு நாட்டமை பண்ணி ஜெயிசுக்குவானுங்க ..... இந்த பொழப்புக்கு நான் இந்த ஒரு நாள் லீவ் என் பொண்டாட்டி புள்ளயோட கொண்டாடிட்டு இருக்கேன் ", என்று இருந்திருப்பார்கள். இவர்கள் வராவிடில் எங்கிருந்து 78 % வரும் ?

தமிழர்கள் மட்டும் அல்லாமல் அணைத்து இந்தியர் மனதிலும் ஜனநாயக நம்பிக்கைக்கு புது ரத்தம் பாய்ச்சிய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு "ஓ" போடலாம் வாங்க !

0 comments: